ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்

0
733

மனித சமுதாயத்தை மேம்படுத்துவது அறிஞர்களின் அறிதல். மனித சமுதாயத்தை சீர் குலைப்பது மத நம்பிக்கையும் கடவுள் கொள்கையும். இதனை இன்றைய கிருத்துவமதக் கொள்கையும், முஸ்லீம் மத நம்பிக்கையும், இந்து மத வேதமும் வேள்வியும் இன்ன பிற மதக் கொள்கையும் ஒன்று போல் இல்லை. இவை ஒன்றுக்கொன்று முரண் பட்டதாக உள்ளதை நாம் அறிவோம். அனைவரும் கல்வி கற்றல் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது கிருத்துவ மதம். அப்படிப்பட்ட கிருத்துவ மதம் இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்த பின்தான் அனைவருக்கும் கல்வி கிட்டியது. அது நாள் வரையில் ஆரிய இனத்தார் வகுத்துக் காத்த மனு நீதி என்ற கொடு நூல் இறைவாக்காகப் போற்றப்பட்டது. அப்படிப்பட்ட இறைவனது வார்த்தை என்பது பார்ப்பணர்கள்தான் கல்வி கற்றிடப் பிறந்தவர்கள் என்கிறது. மனிதனை சூத்திரனாக்கி கல்வியும் சொத்தும் பறித்தது அந்த வேத வாக்கு. மனிதனை தீண்டத் தகாதவன் என்று போற்றியது அந்த மனு நூல் கூறும் கடவுளின் வார்த்தைகள். பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பெண்கள் கல்வி கற்றிட இயலாமல் செய்தது மனு நீதி. இவைதான் இன்றைய மடங்கள் காட்டும் இந்து மதம்.

இது போன்றே பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இன்றும் தடை போடுகிறது இஸ்லாம். ஆனால் வள்ளுவரது குறள் கூறுவதோ மனிதா நீ மதம் என்ற ஒரு சிறையில் மாட்டிக் கொள்ளாதே என்று போதிக்கிறது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கேட்பது அறிவு என்கிறது. அறிவு என்பது அறியும் அறிவினைக் கொண்டது என்கிறது. அறிவுடையார் ஆவது அறிவார் என்கிறது. மதமோ மக்கள் பசி போக்கும் பாலையும் தேனையும் சிலைக்கு வார்த்து வீன் செய்திடத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் நீ சகல செல்வமும் பெறுவாய் என்கிறது. நீ வேள்வி வளர்த்து வேதம் ஓதினால் நினைத்த காரியம் கை கூடும் என்று மதம் போதிக்கிறது. மனிதன் மதி மயங்குகிறான். ஆனால் வள்ளுவரது வார்த்தையோ மனிதா நீ உனது உழைப்பை நம்பு அது உன்னை உயர்த்திப் பிடித்திடும் என்கிறது. விதியையும் ஆண்மாவையும் முன்னிறுத்தி மக்களின் தன்னம்பிக்கைக்கு உலை வைத்திடும் மதக் கொள்கையாளர்களை வள்ளுவர் கடுமையாக சாடுகிறார். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி தாழாது உஞற்றுபவர் (திகு 620) என்கிறார். இந்தக் குறளில் உள்ள உலைவு என்ற வார்த்தையின் பொருள் அச்சம் என்பதாகும்.

அதாவது மதக் கொள்கையாளர்கள் மனிதர்களின் மனதில் அச்சத்தை வார்த்திடுவார்க்கள். கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் நாம் அதற்கு அடிமைகள் என்பார்கள். அதற்கு அவர்களின் நாவேந்திய ஆயுதம்தான் விதியும் நரகமும் ஆண்மாவும் மறு பிறவியும் என்பது. ஆனால் இதனை நம்பி மோசம் போகாதே என்பது வள்ளுவரது வாக்கு. எனவே அச்சம் வேண்டாம் என்பார். ஆங்கிலத்தில் இதனை மித் என்பார்கள். அதாவது இவை உண்மையானது அல்ல என்பதாகும். இந்தக் குறளில் உள்ள உஞற்றுபவர் என்ற வார்த்தையும் மனிதனைக் காத்திடும் ஒரு சொல்லாகும். அதன் பொருள் குறைவற்ற முயற்சியுடன் தினமும் உழைத்தலாகும். இப்படி ஒருவன் கடினமாக உழைப்பதால் அவன் பொருள் பெருகிறான். அவன் நலமாக இருக்கும் போது இந்தக் கடவுள் லீலைகளைச் சொல்லுவோர் மூட நம்பிக்கைகளை விதைத்து தமது நலம் காத்திடுவதை சமுதாயம் அறிந்திட வில்லை என்பது வள்ளுவம் அறிந்தோரது வேதனையாக உள்ளது.

எனவேதான் ஊழையும் உப்பக்கம் காண்பர் என்ற வாசகத்தில் உள்ள உம்மைத்தொகை இத்தகைய கடவுளை முன்னிறுத்தும் காவி வேஷ்டிகளின் அருள் வாக்குகள் அவர்களது பொய்யுரை என்பதாகும் என்பதை தொல்காப்பியம் அறிந்தோர் அறிவர். எனவே உழையுங்கள் உயரலாம் என்பது அறிவியல் அறிஞர்களின் வாக்கு. அர்ச்சணை பூசனை வேள்வி வேதம் ஓதி காலில் விழுந்து கை கட்டி நின்றால் உயராலம் என்பது மதம் கொண்டோர்களின் ஏய்ப்புரை. இதனை மெய்ப்பிக்கும் வார்த்தைகள்தான் ஆக்கம் இழந்தோம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் (திகு 593) என்ற வள்ளுவரின் வாக்கு. இதன் பொருள் உள்ளத்தில் ஊக்கம் என்ற ஒரு உறுதிப் பொருளைக் கொண்டவர்கள், தம் செல்வங்கள் அனைத்தையும் இழந்த காலத்தும், ஐயோ இழந்து விட்டோமே, என்று துயரம் கொண்டு ஓய்ந்து உட்கார்ந்திட மாட்டார்கள் என்பதாகும். அதாவது பணம் இழந்து நட்டம் கண்டபோதும் அதிலிருந்து மீண்டிட உழைத்திட எழுவார்களேத் தவிற கடவுளுக்கு வேதம் ஓதி வேள்விகள் செய்து நெய்யையும் புடவைகளையும் நெல்லையும் அரிசியையும் நெருப்பில் இட்டு நிற்க மாட்டார்கள். அதாவது மனிதனுக்கு பயன் படும் பொருளை கடவுளின் பெயரால் தீயில் இட்டு அழிவதைக் கண்டு மகிழும் உள்ளத்தவர்களிடம் ஏமாற மாட்டார்கள்.

எனவேதான் வள்ளுவரது வார்த்தைகள் மனிதனை அறிவாளிகளாக்கும் வார்த்தைகள் என்பதை உலகம் அறிந்துள்ளது. மதம் மனிதனின் உடலில் வேல் குத்துகிறது. அவனது தலையில் தேங்காய் உடைத்திடுகிறது. துரியோதனனுக்கு நல்ல புத்தியும் நல்ல குணமும் கொடுக்க முடியாதக் கடவுள் நல்லவர்களை கொள்வதற்கு அவதாரம் எடுத்ததாக மதம் கூறுவதை நம்புவது மடமையன்றோ -? மதம் மனிதனை வதைக்கிறது. வேதமும் வேள்வியும் ஓங்கி வளர்ந்த இந்தியாவின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதையும் இன்றைய இந்தியாவின் வளர்ந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் அறியும் உண்மை இன்று மனிதன் தனது உழைப்பால் உயர்வதே காரணம். ஆரியர்கள் செய்த வேதத்தினாலோ அல்லது வேள்வி அர்ச்சனை போன்றவற்றால் இன்றைய இந்தியா உயர்ந்திடவில்லை. வள்ளுவரது வார்த்தைகளோ அவை மனித மடமையின் வெளிப்பாடு என்கிறது. வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here