ஒற்றாடல்

0
799

வள்ளுவர் தமது குறளில் ஒற்றாடல் என்ற ஒரு பகுதியை அதிகாரப்படுத்தியுள்ளார். ஆடல் என்றால் அளைதல், ஆளுதல், கூத்தாடுதல், செய்தல், சொல்லுதல், பொருதல், விளையாட்டு, வீரம், வெற்றி என்ற பல பொருள்கள் உண்டு. வள்ளுவரது குறளில் இப்படிப்பட்ட பலதரப்பட்ட படிமங்களை இந்த சொல் ஏற்றுள்ளதை காண முடிகிறது. இங்கே ஒற்று என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே ஒற்று என்ற ஒரு செயல் முக்கியமாக நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகிறது. அது நாட்டையும் நாட்டு மக்களையும் நாளை வரும் துயர் துடைக்கும் காப்பாக உள்ளது. இருப்பினும் இன்று இந்த ஒரு ஒற்றும் ஆடலும் தனி மனிதத் தேவையாகவும் ஆகிவிட்டது.

இதனை இன்று நம்மைச் சுற்றி இயங்கும் நுண் பொருள் பயன்பாடு மற்றும் தனியார் துறையில் இயங்கிடும் துப்பறியும் நிறுவனங்கள் சாட்சி கூறும். இருப்பினும் இதன் பணிகள் நன்மை தரும் செயலாக இருந்திடும்போது அவை போற்றப்படுகின்றன. இந்த ஒற்றாடல் பற்றிய செயலை அரசும் அரசு இயந்திரமும் ஏற்று நடத்தி வருகிறது. இதற்கான ஒரு சட்ட வடிவையும் இயற்றி அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய சைபர் குற்றவியல் தண்டனை முறைச் சட்டத்தினை நாம் அறிவோம். இதனை வள்ளுவர் இரண்டு ஆயிரம் ஆண்டுகளு’கு முன்னதாக இந்தத் தமிழ் மண்ணில் அமுலா’கம் செய்துள்ளார். ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் (திகு 581) என்பது அவரது வாக்கு. ஒற்றாடலும் அது குறித்த வழி முறைகளை நெறிப்படுத்திக் காட்டும் அறிஞர்களின் நூலறிவும் ஆட்சியாளர்களின் வழி காட்டும் கருவி என்கிறார்.

தெற்று என்பது தெரிதல், வழி காட்டுதல் போன்ற பொருள் தரும் சொல்லாகும். இன்றைய வெளி நாட்டு தூதரகங்கள் இந்த ஒற்றாடல் செயலை நாட்டின் உறவு மேம்பட திறம்படச் செய்வதற்கு வள்ளுவரின் வாக்கு வழி செய்கிறது. இத்தகைய வழிகாட்டுதல் வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன் வேறு எந்த ஒரு மொழியாளர்களும் அறிந்திராத ஒன்று என்பதையும் நாம் எண்ணிப் பார்த்திடல் வேண்டும். எனவேதான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றனர் பெரியோர். இருப்பினும் நூலறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் அறிவுப் பெட்டகம் திருக்குறளாகும். கீதையில் கூட இது போன்ற நல்ல செய்திகள் இல்லை. மேலும் வள்ளுவர் கூறுவார் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் (திகு 582) என்கிறார் பெரியார். இதன் மூலம் நாம் பெறும் அறிதலாவது இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு இந்த ஒற்றாடல் துறை திறமையாக இயங்குதல் அவசியம் என்பதாகும். மேலும் உளவுத் துறையினரும் தமக்கு வரும் இன்னலை எதிர் கொண்டு ஆட்சியாளர்களிடம் செய்தியை திறம்பட சேர்த்திடும் நெஞ்சுரம் தேவையாகிறது.

இப்படிப்பட்ட உளவுத் துறையை நன்கு பயன்படுத்தாத ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தி விடுவர் என்பதனை வள்ளுவர் அறிந்துள்ளார். எனவேதான் ஒற்றினால் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக் கிடந்தது இல் (திகு 583) என்றார். வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here