சோம்பல் தன்மையைக் கொண்டொழுகும் பேதைகளினால் அவர்களது குடும்பமும் குடியும் குற்றப்படுவதை இந்தப் பகுதியில் பார்த்தோம். இந்தக் குறள்களை வள்ளுவப் பெருந்தகை அரசு என்ற இயலில் வைத்துள்ளதை நாம் மறந்திடக் கூடாது என்றக் காரணத்தினால் தற்போது சற்றே மாற்றி யோசித்திட முனைவோம். இதற்கு சான்று கூறும் குறள் வரியைக் காண்போம். படி உடையார் பற்றமைந்தக் கண்ணும் மடி உடையார் மாண் பயன் எய்தல் அறிது (திகு 606).
இங்கே படி என்பது இந்த நிலப்பரப்பைக் குறிக்கும் சொல். உடையார் என்றால் உடையவர் என்பதாகும். அதாவது இந்த நாட்டை ஆளுவதற்கு வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற அரசன் என்றாகிறது. இக்காலத்தில் மா நிலத்து முதல் மந்திரி மற்றும் முதுகுத் தண்டு கொண்ட மற்ற மந்திரிகள் எனலாம். இது போன்றே நாடாளும் பிரதமர் மற்றும் அவரது மற்ற மந்திரிகள் எனலாம். இவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்து பதவியில் அமர்ந்த பின்னர் மக்களை மறந்திடக் கூடாது என்பது வள்ளுவரின் எதிர்பார்ப்பு. அவர்களை மக்கள் எளிதாக வந்து நேரில் பார்த்து தமது குறைகளை க்கூறவேண்டும் என்பது சனநாயத்தின் எதிர்பார்ப்பு.
அதாவது மந்திரிகள் பதவி கிடைத்தவுடன் மக்கள் நடமாட்டம் இல்லாத மலையில் அல்லது காட்டில் சென்று அமர்ந்து கொண்டு ஓய்வெடுப்பேன் என்றால் அது மக்களை ஏமாற்றும் செயலாகிவிடும். இப்படிப்பட்ட ஓய்வினை வள்ளுவர் மடி என்கிறார். மடியென்றால் ஆரியர் கூறும் அசௌசம் அல்லது மடி என்ற குறுகிய எண்ணத்தினை பிரதிபலிக்கும் சொல் அன்று. மடி என்றால் சோம்பல் என்பதை இதற்கு முன்னதாக விளக்கி உள்ளோம். எனவே படியுடையார் பற்றமைந்த கண்ணும் என்றால் ஒருவன் நாடாளும் மன்னனாக பதவி ஏற்ற பின்பு அவன் சோம்பல் கொண்டு பணியாற்றாமல் ஓய்வெடுப்பேன், சுற்றுலாச் செல்வேன் என்று நாட்டு மக்களை புறம் தள்ளினால் , அதனால் அவர்களுக்கு கிடைக்க இருப்பது உண்மை இன்பம் அன்று என்கிறார் பெரியார். ஒரு வேளை இப்படிப்பட்ட சோம்பேரி மந்திரிகள் புலவர்களின் வார்த்தைகளைக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்டால் என்ன நடக்கும் என்றும் வள்ளுவர் சிந்தித்துள்ளார். அதற்கு அவர் கூறுவார் & குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் (திகு 609) என்பார்.
இதன் பொருள் முதலில் அவனிடம் வந்தமர்ந்த சோம்பல் என்ற ஒரு நோயால் அவன் தவறுகள் பல செய்து விட்டான். ஆனால் இப்போது தன்னை திருத்திக் கொண்டு விட்டான். பெரியோர்களின் பேச்சுகளை செவி கொடுத்துக் கேட்கும் குணம் பெற்று விட்டான். யார் மீதும் வழக்குப் போட்டு ஜெயிலில் பிடித்துப் போடுவதில்லை. தற்போது அவனது மன நோய் நீங்கி விட்டது. எனவே இதுவரை அவன் செய்து வந்த குற்றங்கள் களையப்பட்டு விட்டன என்கிறார் பெரியார்.
இதனையே குடியாண்மையுள் வந்த குற்றம் கெடும் என்ற வார்த்தைகள் தெளிவு படுத்துகின்றன. எனவே ஆட்சியாளர்கள் தாங்களை அவ்வப்போது மன நோய் மருத்துவர்களிடம் முறையான ஆலோசனைகளைப் பெறுவது நலம். இந்தச் செயலால் மக்களின் மன நலம் காக்கப்படும். மேலே சொல்லப்பட்டது வள்ளுவரது வாக்கு. வள்ளுவம் அறிவோம்.
விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.