கொலை மேற் கொண்டாரிற் கொடிதே

0
35

மக்கள் என்பவர் மாக்களில் இருந்து சற்றே வேறு பட்டவர்கள். மாக்கள் என்பது மிருகங்களாகும். அவை செய்வது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அப்படி அவை ஏதும் செய்திடாமல் அமைதியாய் ஒரு இடத்தில் அமர்ந்திட இயலாது. காரணம் அவை பெறும் இன்பம் என்பது மற்ற உயிர் படும் துன்பத்தினை கண்டு ரசிப்பதாகும். இந்தக் குணம் ஒரு சில மனிதர்களிடமும் ஒட்டிக் கொண்டிருத்தலை நாம் காண முடியும். அவர்கள் தீயத் தொழில் செய்கின்றவர்கள். இருப்பினும் அவர்களின் நாகரீக உடையும் பகட்டான வாழ்க்கையும் அவர்களிடம் உள்ள துன்பம் செய்யும் நோய் வெளிப்படாமல் மறைத்திடச் செய்கிறது. இப்படிப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்தி அரசு கட்டில் ஏறினால் அந்த நாட்டில் உள்ள நல்ல மனிதர்கள் என்ன பாடு படுவார்கள் என்பதை வள்ளுவன் அன்றே கண்கூடாகக் கண்டு கண்ணீர் வடித்திருக்கின்றான். அவனது அந்தக் கண்ணீர்த் துளிகள்தாம் கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற் கொண்டு அல்லவை செய்த ஒழுகும் வேந்து (திகு 551) என்ற பாடல் வரி.

காட்டிலே வேடுவர்கள் தமது வாழ்விற்காக மிருகத்தைத் துரத்திச் செல்வதும் அதன் மீது காயங்களை உண்டாக்கி அதனைக் கட்டிப் பிடித்துப் போராடி பின் அதன் உயிரைப் பறிப்பதையும் வள்ளுவர் பார்த்திருக்கின்றார். அவர்கள் பாவம் என்கிறார். காரணம் வயிற்றிற்காக அவர்களது மனம் மிருக மனமாக மாறிவிட்டது. அதனோடு போராடினால்தான் அவனது ஒரு வேளை பசி அடங்கும். காட்டில் உள்ளவர்களின் வாழ்விற்கு அந்தக் கொலைத் தொழில் சரி என்று படுகிறது. ஆனால் நாட்டில் வாழும் மனிதர்களும் தனது வயிற்றுப் பாட்டிற்காக இப்படிப்பட்ட கொடுந்தொழில் செய்யலாமா என்பது வள்ளுவரின் கேள்வியாக உள்ளது. அதுவும் மக்களுக்கு பலவித இலவச வார்த்தைகளை வாக்குறுதிகளாக்கி வாக்குப் பெற்று அரசு கட்டிலில் அமர்ந்த பின்னே இப்படி சுயநலம் கருதி மக்களுக்கு துன்பம் தந்திடும் ஆட்சியாளர்களை என்ன செய்வது என்பார்க்கு அறிஞர்கள் நீதி நெறி முறைகளை எடுத்துக் கூறுவர்.

அப்படிப்பட்ட போதனைதான் இந்தக் குறள் வரி. அதிலும் முக்கியமாக கொடிதே அலைமேற் கொண்டு அல்லவை செய்த ஒழுகும் வேந்து என்ற வரி பொருள் பொதிந்தது. அலை மேற்கொள்ளுதல் என்றால் இடையறாத் துன்பத்தினை ஒவ்வொரு நாளும் தருதலாகும். எப்படி வேடன் ஒவ்வொரு நாளும் ஒரு மிருகத்தின் உயிர் பறித்து அதனை உண்டு மகிழ்கிறானோ அப்படி இந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சில ஆயிரம் மனிதர்களை வேட்டையாடி விடுகின்றனர். அப்போதுதான் அவர்கள் பணம் பதவி வானூர்தி தரை ஊர்தி சொகுசு வேடிக்கை விளையாட்டு கும்மாளம் என்ற இன்பங்கள் இடையறாது கிடைத்த வண்ணம் இருக்கும் என்பது அவர்களது காட்டில் பெய்கின்ற மழையாக உள்ளது. அவர்களுக்குத் தெரியாதது மழை ஒரு நாள் பொய்த்துப் போனால் 18ம் நூற்றாண்டு பிரஞ்சு நாட்டு புரட்சியில் மேரி அண்டாயினட்டின் நிலைமை அவர்களுக்குத் தப்பாது கிட்டிடும் என்பது. மேலும் அவரது வார்த்தை அல்லல் செய்து ஒழுகுதல் என்பதை கவனித்திட வேண்டும்.

ஒரு நாள் ஒரு மிருகத்தினை வேட்டையாடினால் பரவாயில்லை. ஆனால் வேடன் வேட்டையாடவதை தொழிலாகக் கொண்டிருக்கிறான். இந்தத் தொழில் என்பது நாளும் தடையின்றி நடப்பதை ஒழுகுதல் என்ற வார்த்தை சுட்டுகிறது. அப்படிப்பட்ட ஒழுகலாறு வேடனுக்குத் தொழிலாக இருக்கலாம். ஆனால் நாடாளும் மன்னவனுக்கு அப்படிப்பட்ட தொழில் கூடாது என்கிறார். எப்படி வேடன் தான் செய்கின்ற கொலைத் தொழில் புனிதமன்று என்று அறிந்திட மறுக்கின்றானோ அப்படியே இந்தக் கொடுங்குணம் கொண்ட ஆட்சியாளர்கள் தமது கொடிய செயல்களின் விளைவுகளை நினைத்து பார்த்திட முன்வருவதில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. காரணம் அவர்களிடம் சேர்ந்துள்ள அபரிமிதமான பண பலமும் அடியாட்களும் படை பலமும் மணிமகுடம் தரித்துத் திரிகிறது. யாராவது தன்னை எதிர்த்து கேள்வி கேட்டால் தனது மானம் போய்விட்டதாகக் கருத வைத்து விடுகிறது. காரணம் அவர்கள் குற்றம் புரிந்தவர்கள். குற்றவாளிகள் என்று மக்களும் மக்கள் மன்றமும் தீர்ப்பு கூறினாலும் பதவி என்ற வேடன் கை ஆயுதம் சக்தி மிக்கது. அது அவர்களுக்கு போதை தருவது இயற்கை.

ஆனால் அந்தப் போதை வெறியாகிப்போனால் என்ன நடக்கும் என்பதை வள்ளுவரது அடுத்தப் பாடல் புலப்படுத்துகிறது. அது & நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் (திகு 553) என்பதாகும். இதன் பொருள் ஆட்சியாளன் ஒவ்வொரு நாளும் நல்லவனாக தனது சொல் செயல் சிந்தனை மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவனது சொல்லும் செயலும் நன்மை தருவது என்று படித்த ஏழை வா’காளன் உணர்தல் அவசியம். காரணம் இந்த உணர்வு வேடனுக்கு வருவதில்லை. காரணம் அவனது அறிதலும் அறிவும் கல்வி சார்ந்தது அல்ல. அவன் ஒரு மூடன். ஆனால் நாட்டு மக்கள் படித்த அறிவாளிகளாக வேண்டும். அவர்களது அறிவும் அறிதலும் ஆட்சியாளர் கொள்ளையடித்திட திட்டங்கள் தீட்டுபவர்கள் அல்ல என்ற அறிதல் ஒவ்வொரு நாளும் பெற்றிட வேண்டும் என்பதாகிறது. இல்லையேல் நாள் தொறும் நாடு கெடும் என்பது வள்ளுவரது வாக்கு.

கடந்த இரண்டாயிரம் காலத்து இந்திய ஆட்சி முறை வரலாற்றினை படித்தோர் அறிவது வேறு விதமாக உள்ளது. அங்கு மேலே குறிப்பிட்ட தீயோர்கள் பலரும் ஆட்சியாளர்களாக வந்துள்ளனர். அவர்களது ஆட்சியில் மக்கள் கல்வி மறுக்கப்பட்டுள்ளனர். வீரம் ஒன்றையேத் துணையாகக் கொண்ட குடிமக்களிடம் கடவுள் கதைகளைக் கூறினர். கதைக் கேட்ட மாந்தர் கடவுள் உருவம் செய்தால் காசு கிடைக்கிறதே என்று மனம் மாறினர். கடவுளை மறந்தால் நரகம் செல்வாய் என்றனர். அதனையும் அப்படியே ஆமாம் என்று ஏற்று கைப்பொருள் இழக்கும் மனிதர்களை இன்றும் காண முடிகிறது. காரணம் இவர்கள் எல்லாம் அவன் செயல் என்று துன்பத்தினை இன்பமாய் கொண்டனர். இருப்பினும் எத்தனைக் காலம்தான் மக்களை ஏமாற்றிட இயலும் ? இதற்கும் வள்ளுவர் பதில் தருகிறார். வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (திகு 563) என்கிறார்.

இதன் பொருள் அரசன் குடி மக்கள் அஞ்சும் செயல்களை செய்து ஒழுகின் அவனது அந்தக் கொடுஞ் செயல் விரைந்து அவனையே அழித்து விடும் என்பார். அதாவது ம’களே திரண்டு எழுங்கள் என்று வள்ளுவரால் அன்று சொல்ல முடியாது. ஆகையால் மக்களை பொறுமையாக இருந்து அவனது கொடுமைகளைத் தாங்கிக் கொள் என்றார். அவன் அவனது கொடிய செயல்பாட்டினால் அவன் துன்புறுவான் அழிந்து மடிவான் என்கிறார். ஆனால் இன்றைய சமுதாயம் வேறு அன்றோ ? செங்கோலனை நாம் அறிவோம். ஆனால் வள்ளுவர் இந்தக் குறளில் வெங்கோலன் என்பதைப் பாருங்கள்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,

அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here