பெருஞ்செல்வம் பேய் கண்டன்னது உடைத்து

0
889

இந்த வார்த்தைகளை வள்ளுவர் வெருவந்த செய்யாமை என்ற அதிகாரத்தில் கையாண்டுள்ளார். வெருவந்த செய்தல் என்றால் மக்கள் அஞ்சி ஒடுங்கி நிற்கும் நிலைகுலைந்த செயல்களை மன்னன் செய்திடக் கூடாது என்பதாகும். அதாவது அரசு கட்டிலில் அமர்ந்தவரைக் கண்டு பயந்து எழுந்து நின்று குனிந்து கும்பிட்டு நிற்கும் கூட்டத்தினர் வள்ளுவரது காலத்திலும் இருந்திருக்கின்றனர். அப்படி நிற்கும் இழி குணம் கொண்டோர் அடையப்போகும் பயன்தான் என்ன என்பார்க்கு அரசனிடம் குவிந்துள்ள பெருஞ் செல்வம்தான் என்பார். இருப்பினும் மனிதன் தனது செய்கையால் புனிதப் பிறப்பாளன் என்றும் இழி பிறப்பாளன் என்றும் ஆரிய மொழி பகரும். அதாவது தெய்வம் என்றும் பேய் என்றும் அம்மொழி கண்ட மத நூல் கூறும்.

இருப்பினும் பேய் பெற்ற பெரும் செல்வத்தினால் பேய்களுக்கும் நன்மையில்லை பிறர்க்கும் நன்மை தராது என்பது வள்ளுவரது கருத்து. காரணம் பணம் உழைத்துப் பெறுவதற்கும் நாட்டின் பணத்தினை வாக்குச் சீட்டினால் கைப்பற்றுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. மக்கள் பணத்தினை மக்களுக்காக செலவு செய்யும்போது தன்னலம் கருதாக குணம் நல்ல மனிதனுக்கு இயற்கையாக அமைந்து விடும். ஆனால் கொடுங்குணம் கொண்ட பேய்களுக்கு நீதியும் நியாயமும் எதிரியாகும். மக்களது உடைமைகளை கொள்ளையடிப்பது அவர்களுக்கு மகிழ்வு தரும் குணம். எனவேதான் அம்மாதிரி குணம் கொண்ட ஆட்சியாளரை பேய் என்றார். பேயின் கையில் உள்ள பெரும் பணம் எந்த வகையில் செலவு செய்யப்படும் என்பதை அறியும் பேய்களும் வெருண்டோடும். ஆம் அவர்கள் செய்திடும் செலவு மக்களை அதட்டி அடக்கி ஒடுக்குவதற்கு என்பதை இன்றைய அரசியல் சூழலை அமைதியாக கண்டிடும் அறிஞர்கள் அறிவர். அத்தகைய கொடிய குணம் கொண்ட பேய்களின் முகம் எப்படி இருக்கும் என்பார்க்கு அதனை எடுத்துச் சொல்ல வள்ளுவர் அஞ்சுகிறார். காரணம் வள்ளுவரது வார்த்தை பேய்களின் புகழுக்கு களங்கம் செய்து விடும். பேய்களுக்கு புகழ் உண்டு என்பவர் யாராக இருந்திட இயலும் என்பது வேறு.

இருப்பினும் அவர் கூறுவார் – அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேய் கண்ணடன்னது உடைத்து (திகு 565) என்பார். இங்கு செவ்வி என்றால் காட்சி என்று பொருள். அதாவது அந்தப் பேய்களை அவ்வளவு எளிதாக காண முடியாது. காரணம் அவர்களது செயல்பாடு அவர்களை வெளியில் வரச்செய்திடாது. பதுங்கும் குணம் கொண்ட திருடர்கள். எனவே அப்படிப் பார்க்கக் கிடைத்தாலும் பார்த்தவருக்கு அச்சம் வந்திடும் முகம் கொண்டது அப்பேய்கள். எனவேதான் ஐயா என்று கண்டவர் கையெடுத்து குனிந்து கும்பிடு போடுகின்றனர். இதனையே வள்ளுவர் இன்னா முகத்தான் என்பார். போதாதற்கு அப்படிப்பட்ட பேயிடம் அரச பதவி இருப்பதை பெருஞ்செல்வம் என்பார். இதனை விரிவாக எழுதுவதற்கு இன்றைய அறிஞர்கள் பயந்து ஒதுங்கும் நிலைமையை இந்தக் குறள் எடுத்தோதுகிறது. இருப்பினும் வெருவந்த செய்யாமை என்ற அதிகாரத்தின் தலைப்பு விதி வசத்தால் அரசு கட்டில் ஏறும் பேய்களுக்கு தயவு செய்து யாரையும் உங்கள் நலன் கருதி துன்புறுத்தாதீர்கள் என்று கெஞ்சுகிறது.

இருப்பினும் இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன் உறை கடுகி ஒல்லைக் கெடும் ( திகு 564) என்ற வள்ளுவரது வார்த்தை பொய்த்திடாது என்ற நம்பிக்கை வள்ளுவம் அறிந்த அறிஞர்களுக்கு நம்பிக்கைத் தரும் குறளாகும். வானத்தில் பறப்பது வெள்ளைக் காககம் என்றால் இன்று ஆம் என்று குனிந்து கும்பிடு போடும் கொள்ளையர் கூட்டம் என்ற காயாம்பு கவிஞனின் வரிகள் கண்ணீர் வரிகள். வள்ளுவம் அறிவோம்.

விளக்கம்
பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here