திருக்குறள் படிக்கும் குணம் உடையோர் எத்துணை குறைந்த அளவு அறிதலைப் பெற்றிருந்தாலும் ஒரு சிறந்த அறிவாளியாக மலர்வது திண்ணம். இன்றைய கல்லூரி ஆசிரியர்களும் ஒரு காலத்தில் மாணவர்களாய் இருந்து வந்தவர்கள்தாம். அவர்களது அறிது அப்போது சிறிது என்பது. இருப்பினும் திருக்குறள் படித்ததினால் பெற்ற அறிவு இந்த சமுதாயம் தரும் அறிதல்களில் இருந்து மாறுபட்டு இருப்பதை அறியும் அறிவினைத் தருகிறது. அதாவது திருக்குறள் நம்முள் உறங்கிக் கிடக்கும் அறிகின்ற அறிவினை கண் விழிக்கச் செய்கிறது. அப்போது அவனது முயற்சியும் வினையாற்றும் திறனும் தனித்தன்மை பெற்றுவிடுகிறது. இப்போது அந்த மாணவன் நல்ல ஆசிரியனாக நல்ல தந்தையாக சிறந்த அறிஞனாக சமுதாயத்தில் அறியப்படுகின்றான். இதற்குக் காரணம் மாணவர்களிடம் இன்று குடிகொண்டிரு’கின்ற தாழ்வு மனப்பாண்மையாகும். அவர்களது தாழ்வு மனப்பான்மை என்பது அவர்களது அறியாமையை முன்னிருத்துகிறது. ஆனால் அறிய வேண்டியது இது என்ற அறிதலை அவர்களுக்குத் தருவது வள்ளுவரின் வார்த்தைகள். அப்போது அவன் இதுநாள் வரையில் நம்மால் இதனைச் செய்திட இயலாது என்று கொண்டிருந்த கொள்கை மறைகிறது. அப்போது அவனிடம் மண்டிக் கிடந்த தாழ்வு மனப்பான்மை விடை பெறுகிறது. அவன் இப்போது காரியத்தில் இறங்கிவிடுகிறான். இரவு பகல் பாராது உழைக்கின்றான். காரணம் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் (திகு 611) என்ற குறள் வரியின் பொருள் உணர்ந்து கொண்டுவிட்டான். ஆம் அவனிடம் இப்போது அருமை உடைத்தென்று அசாவாமை இல்லை. அதாவது என்னால் இதனை செய்திட இயலாது (அருமை) என்றக் கொள்கை மறைகிறது. அப்படி அவனிடம் தன்னம்க் கை தலையெடுத்திடும்போது அவனிடம் இருந்த சிறுமை குணம் ஒழிந்து பெருமைத் தன்மை தளிர் விடுகிறது. அப்போது இதனை நான் சிறப்பாக செய்திடுவேன் என்றுக் கூறுவான். அதனை அவ்வாறு செய்திடும் வழி வகைகளைக் காண்பான். இப்போது அவனது உடலும் உள்ளமும் வினையாற்றும் திறம் பெற்றதால் அவனது தலை தானாக நிமிர்ந்து விடுகிறது. அவன் நிமிர்ந்த நன்னடையை பெற்றுவிடுகிறான். இதனையே பெருமை என்கிறார். அத்தகைய பெருமை அவனுக்கு புதிய உற்சாகத்தினையும் முயற்சியையும் தந்து விடுகிறது என்கிறார் பெரியார். அதனையே பெருமை முயற்சி தரும் என்கிறார். இப்போது குறள் முழுதுமாக பார்ப்போம். அது & அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (திகு 611) என்பதாகும். இந்தக் குறளில் அருமை பெருமை என்ற இரண்டு வார்த்தைகளும் பொருள் பொதிந்த வார்த்தைகளாகும். வள்ளுவம் அறிவோம். .
விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.