மனிதன் குணம் என்னும் ஒரு செயல்பாட்டினைக் கொண்டவன். குணம் என்பது ஒரு பண்பு என்றாலும், அது ஒருவனது செயலால் அறியப்படுகிறது. நல்லது செய்தல் அவனது குணம் என்பர். பொருமை காத்தல் அவனது குணம் என்பர். கர்ணனின் குணம் ஈகை என்பதை நாம் அறிவோம். எனவே இந்த குணம் என்பது ஒரு வினையாக இருக்கும்போது அதனை பண்பு என்று போற்றுவர். மேலும் வினை என்பது ஒரு நாள் அல்லது ஒரு முறை செய்து விட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டால் அது அவனது குணம் என்று போற்றக் கூடாது. அது அவனது பண்பும் ஆகாது. வள்ளுவர் அரசியலைப் பற்றி இலக்கணம் எழுதும்போது ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடி பொறுத்தாற்றும் பண்பே தலை (திகு 579) என்கிறார். அதாவது தன்னை வருத்தும் இயல்புடையவரிடத்தும், அவர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே முதன்மையுடைத்து என்று பொருள் தருவது. இதனையே இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திகு 314) என்றார். அதாவது ஒருவன் நமக்கு துன்பம் செய்து விட்டான். அது அவனது குணம் என்று கொண்டால் அச்செயல் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்டதாகிறது.
அவன் ஏதோ ஒரு பயன் கருதி செய்திருந்தால் அவனது கொடிய மனம் வெளிப்படுகிறது. அப்போது இந்த சமுதாயம் அவனை தண்டிப்பதை தவிர்த்து அவனது அத்தகைய குணம் அவன் கொண்ட மன நோயாகக் கருதிட வேண்டும் என்கிறார் பெரியார். அதாவது அத்தகைய மன நோயாளியின் மனம் நலம் பெற அவனுக்கு முதலில் சிறிது உண்ண உணவு தந்தால் அது அந்தப் பொழுதில் அவனது பசி போக்கும். அமைதி அடைவான். சற்றே நன்றியறிதல் என்ற பண்பு அவனிடம் தளிர்விடும். மேலும் அவனது மன நோயினை அறிந்து நல்ல வார்த்தை தன்னம்பி’கை தரும் செயல் போன்றவற்றை நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதி அவனை மீட்டு எடுத்திட வேண்டியது சமுதாயக் கடமை என்கிறார் வள்ளுவர். இதுவே நன்னயம் செய்து விடல் என்ற அவரது உத்தரவாக உள்ளது. எனவே ஒறுத்தாற்றும் குணம் அவனது மன நோயின் வெளிப்பாடு என்பதை அறிந்திடுக என்கிறார் பெரியார். அதற்காக அவனால் பாதிக்கப்பட்டோர் அவனைப் போன்றே தீய குணத்தினைக் கொண்டிடுதல் தவறு என்கிறார்.
மனிதனின் முன்னே எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன என்பதை மற’க வேண்டாம் என்பார். இதனை ஆங்கிலத்தில் ஆப்ஷன், சாயிஸ் என்பார். இவற்றில் சிறந்த மாற்று சிந்தனை என்பது நன்னயம் செய்து விடல் அல்லது பிறர் செய்த தீங்குகள் என்பது செய்த மனிதரின் மன நோயின் வெளிப்பாடு என்ற அறிதலாகும். இப்போது நம்மால் பொறுமையாக இருந்திட வேண்டும் என்ற செயல் முடியாத செயலாகும். ஆனால் வள்ளுவர் காட்டிய அறிதல் நம்மை நல்ல பண்பாளனாக்கும். அது மற்றவன் ஒரு மன நோயாளி என்பதும் அவனது நாக்கும் கை கால்களும் அவனது கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் அவன் கசந்திடும் வார்த்தைகளை உமிழ்வதும் தனது செயல்பாடுகளினால் எண்ணற்ற இடர்பாடுகளை ஏற்படுத்துவதுமாய் இருக்கிறான் என்ற அறிதலாகும். இந்த அறிதல் நம்மை மேதையாக்கிடும். பொறுத்து’ கொள்வது என்பது நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும். அறிவோம் வள்ளுவரை.
விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.