மடி என்னும் மாசு

0
747

திருவள்ளுவர் தமது காலத்தில் பார்த்து மகிழ்ந்த மனிதர்களும் இகழ்ந்த மனிதர்களும் இன்றும் நம்மிடையே உலவுவதைக் காண முடிகிறது. நாமும் நம்மைச் சுற்றி உள்ளோரைக் கண்டு வியக்கிறோம் அல்லது வெறுத்து ஒதுக்கி விடுகிறோம். காரணம் வியப்பதற்கு அவர்களிடம் உள்ள அளப்பறி ஆற்றலும் அவர்ளின் முகம் காட்டும் இன்னொளியும் நம்மை ஒரு கணம் அவர்கள்பால் இழுத்து நிறுத்திவிடுகிறது. அப்போது நாம் அவர்களை அவர்களது உன்னத செயல் குறித்தும் அவர்களது இனிய பேச்சுகள் குறித்தும் ஓரிரு வார்த்தைகள் கூறி அவரைப் பாராட்டி நம்மை மகிழ்வித்துக் கொள்கிறோம். ஆம் நாம் நம்மை மகிழ்வித்துக் கொள்கிறோம். அதாவது நாம் ஒருவருக்கு ஏதோ ஒரு சில ஆயிரம் ரூபாய்களை தானமாக தருகிறோம் என்றால் அந்த செயல் தரும் இன்பம் இரு வகையாக உள்ளதை அறிவோம். ஒன்று நாம் கொடுப்பது. மற்றது மற்றவர் கையேந்தி பெறுவது.

பலன் இருவருக்கும் இந்த ஒரு செயலால் இன்பம்தான். என்றாலும் முதலில் கொடுக்கும் தன்மை உள்ள உள்ளம் கொடுக்காமல் தவிர்க்கும்போது அது அப்போது தவித்து நிற்கும். கையேந்தி வாங்குவதற்கு ஏங்கும் இதயத்திற்கு என்றும் ஏமாற்றம் இல்லை. காரணம் அவர்களுக்குத் தெரியும் தான் உழைத்திட தயாராக இல்லாத உடலை உடையவன் என்று. எனவே மற்றவர்களின் உடைமைப் பொருளுக்கு தான் உரிமையாளன் ஆவது பாவம் என்பதும் அந்த கையேந்திகளுக்குத் தெரியும். எனவே இவர்களது உள்ளம் என்றும் ஏமாற்றம் அடையாது அல்லது இல்லையே என்று ஏக்கம் கொள்ளாது. இருப்பினும் கொடுப்போரது உள்ளம் கொடுக்கத் தவறியதால் குற்றம் பெற்றுவிடும் தன்மையது. எனவேதான் அவை கொடுத்திடாமல் மறைத்து வைப்பதில்லை. எனவேதான் ஏற்பது இகழ்ச்சி என்ற ஒரு நிலை நிலவியபோதும் கொடுப்போர் என்றும் கொடுத்து க்கொண்டிருக்கும் நிகழ்வையும் நாம் அறிவோம். அத்தகைய உள்ளங்கள் சோம்பல் கொண்டு ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்திடாது. அவைதான் உழைப்பதும் ஒருவருக்கு கொடுத்து உதவுவதுமாக நாளும் உயர்வை நோக்கி வளர்ந்திடும். சோம்பல் கொண்டு உழைப்பை ஒதுக்கி வைத்து விட்டு கையேந்தி பிச்சை ஏற்று வாழும் வாழ்க்கையை உடையவனை உலகம் தூற்றும்.

இவர்களை வள்ளுவர் திட்டுவார், திருத்திடத் துணிவார். காரணம் திட்டுவதும் திருத்துவதும் பெரியவர்களின் சமுதாயக் கடமையாகும். அப்படிப்பட்ட சோம்பேரிகளை அறிவற்ற பேதைகள் என்று வருந்துகிறார் பெரியார். அவர்கள் பிறந்த குடும்பம் இவனது சோம்பல் தன்மையினால் அழிந்து போகும் என்பார். காரணம் அவன் பொருள் ஈட்டும் வழி காட்டும் படிப்பினையோ அல்லது உழைப்பினையோ பெறுவதற்கு உரிய முயற்சியை அவனது சோம்பல் என்ற மடி மாய்த்து விடுகிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் வாக்கு அவன் காதைத் தொடுவதற்கும் அஞ்சு ஒதுங்கி விடுகிறது. எனவே இவன் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை. அவன் திண்ணைத் தூங்கியாக காலம் தள்ளுகிறான். இதனால் இவன் பிறந்த குடும்பத்தினையும் குடும்ப உறவினர்களையும் காத்திடும் திறமையற்று திரிகிறான். அப்போது அந்த குடும்பம் அழிவதோடு அவனது முன்னோர்களால் கட்டிக் காக்கப்பட்ட நற்பெயரும் அழிந்து மறைந்து விடுகிறது. அவன் நாடோடியாகிறான். இதனையே வள்ளுவர் மடிமடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி மடியும் தன்னினும் முந்து (திகு 603) என்றார். சோம்பலின் குணத்தினைப் பற்றி வள்ளுவர் கூறுவார் சோம்பல் என்பது சோம்பல் இன்றி ஒருவனைப் பற்றி அவனை வீட்டினுள் முடக்கிப் போட்டு விடும் என்பார். எனவேதான் அவர் அறிவுரைக் கூறும்போது மடியை மடியா ஒழுகல் என்பார்.

அதாவது சோம்பல் தன்மை நம்மை தீண்டிடாமல் காப்பதற்கு சோம்பல் இன்றி முயற்சிக் குன்றாமல் வினையாற்றிட வேண்டும் என்பார். அப்பொழுதுதான் அவனுக்குத் தேவையான பொருள் வளமும் அவனைச் சார்ந்திருப்போராகிய பெற்றோர் உற்றார் உறவினர் மனைவி மக்கள் என்போரது தேவையும் மகிழ்வும் குன்றாமல் காத்திட இயலும் என்பார். அப்போது அவனது குடும்பமும் அவர் தோன்றிய குடும்பத்து நற்பெயரும் காத்து நிற்கும் என்பார். இதனையே மடியை மடியா ஒழுகல் குடியை குடியாக வேண்டுபவர் (திகு 602) என்பார். வள்ளுவர் மனிதனிடம் கண்ட குறைகளை குறைகள் என்று ஏற்காத அல்லது அறிந்திட இயலாத அறிதலைக் கொண்ட மாந்தர்களைக் கண்டு கண்ணீர் வடித்தார். அத்தகையோரிடம் கொண்டிருக்கும் எதிர்மாறான நோய்க் குறிகளை இவர் உணர்ந்தார். அந்த வகையில் இந்த சோம்பலுக்கு வகை செய்திடும் நோய்களின் அடையாளங்களை வள்ளுவர் கண்டுக் கொள்கிறார். அவைதாம் நெடு நீர் என்ற ஒன்று. அதாவது இப்பொழுது இந்த நொடிப்பொழுதில் நாம் செய்ய வேண்டிய செயலை மறு நொடி அல்லது நாளைக்குத் தள்ளிப் போடுவது.

இதனையே காலம் தவறாமை என்ற பன்ச்சுவாலிட்டி. ஒருவன் இன்று செய்து கொள்ள வேண்டிய முகச்சவரத்தை நான்கு நாளைக்குத் தள்ளிப் போடும்போது அவனது முகத்திலும் உடலிலும் சோம்பல் குடிகொண்டு விடுகிறது. அவன் அழகிழக்கிறான். இவனது முகத்தைக் காணும் மனிதர்கள் இவனது சோம்பலைக் கண்டு சற்றே விலகுவர். அடுத்த நோய்க்குறி மறவி என்கிறார். மறவி என்றால் மறதி. காரணம் சோம்பல் என்ற ஒன்று தொட்டு விடும் மூளையில், அமிலங்கள் அபரிமிதமாக தங்கி விடுகின்றன. காரணம் வினையாற்றல் இல்லாத மூளை அவனுடையது. எனவே அவனது கையும் காலும் நாவும் இயக்கம் குறைந்து முடங்கியபோது அவனது எண்ணங்கள் வயிற்றுப் பசிக்கும் தாகத்திற்கும் தன்மானத்திற்கும் தவித்திடும். அப்போது சோம்பல் அவனைத் துவட்டிப் போட்டு விடுகிறது. இந்தத் தாக்கத்தில் அவனது அட்ரீனல் சுரப்பியும் சோம்பல் கொண்டு விடுகிறது.

அப்போது சுரந்திடும் அமிலம், சுரக்கின்ற அதே இடத்தை (மூளையை) அரித்து விடுகிறது. அவன் தனது நினைவை இழக்கின்றான். அதாவது அவன் மறந்திடும் தன்மை கொள்கிறான். தன்னை மறக்கிறான். தான் பிறந்த குடியை மறக்கிறான். தன்மானம் மறக்கிறான். அடுத்த இரண்டு அடையாளங்கள் சோம்பலும் நீண்ட உறக்கமும். இப்போது உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைவதால் தனது சுய பலம் இழந்து போகிறது. ஒருவித மயக்கம் தூக்கமாக அவனை தரையில் கிடத்தி விடுகிறது. காலம் தவறுதல், மறதி, சோம்பல் மற்றும் ஆழ்ந்த தூக்கம் என்ற இந்த நான்கு விதமான தன்மைகளும் சீக்கிரமாக செத்து மடியக் காத்திருப்போர் விரும்பி அணிந்திடும் ஆபரணங்கள் என்கிறார் வள்ளுப் பெருந்தகை. நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் கெடு நீரார் காமக் கலன் (திகு 605) என்கிறார்.

இன்றைய மதவாதிகள் மனிதனை சென்ற பிறப்பில் பாவம் செய்து விட்டாய் அதனால்தான் நீ இப்போது கஷ்டப்படுகிறாய் என்கிறது. அதாவது மனிதனை குற்றவாளியாக்கி தமது வலையில் வீழ்த்தி அவனிடம் உள்ள பொருள் பறித்திட முயல்வது இன்றைய மதக் கருத்துகள். ஆனால் வள்ளுவரோ மனிதன் கொண்ட நோயினை அவனிடம் எடுத்து வைத்து அவனை யோசிக்கச் செய்கிறார். அவனிடம் உள்ள வேண்டாத ஒன்றை அகற்றும்போது அவன் புடம் போட்ட தங்கமாக மாறுவதை காட்சிப் படுத்துகிறார். மடி ஒரு மாசு என்பது இப்போது தெரிகிறதல்லவா ? வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here