முயற்சி நமக்கு பெருமை தரும்!

0
1028

வள்ளுவர் மனித குலம் பல்வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திட விரும்பியவர். ஆனால் அதற்குத் தடையாய் இருந்த சமுதாயத்தில் அவர் வாழ்ந்தார். சமுதாயம் என்பது மனிதனும் அவனது வாழ்வும் என்றாலும் அவரது காலத்தில் மனிதன் அவனது செம்மையான வாழ்விற்கு வேற்று நாட்டு மனித வரவினால் பாதிக்கப்பட்ட சமுதாயமாக இருந்தது. அவனது முயற்சிக்கு வேற்று மண்ணில் இருந்து வந்து குடியேறிய சமுதாயத்தினரின் கொள்கையும் வாழ்வும் எண்ணற்ற தடைகளைத் தந்தது.

வயல்களில் உழைத்து நெல்மணிகளை சேகரிக்கும் வேளாண் தொழில் செய்வது இழிவான செயல் என்றனர். இராகு காலம் எம கண்டம் என்று இயற்கையையும் மாசு படுத்தும் கொள்கை தந்தனர். நோய் வந்தால் தெய்வ குற்றம் என்றனர். நாலாம் வருணத்தாருக்கு பொருளியல் போன்ற இம்மைப் பயன் தரும் நூல்கள் கற்பிக்கலாகாது (மநு நீதி நான்காம் அத்தியாயம் 80வது ஸ்லோகம்) என்றனர். இப்படியாக இன்னும் பல போதனைகளைப் புகன்று மனித முயற்சியை தகர்த்து வந்தனர். விளைவு இந்தியா கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இருண்ட கண்டமாக இருந்து வந்தது.

இந்த நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தோர் சித்தர்களாக பெரியோர்களாக புரட்சிக் கவிஞர்களாக எண்ணற்ற கவிதைகளை யாத்தனர். அந்த வகையில் வள்ளுவர் எதிர் படும் இண்ணல் களைந்திட இடுக்கண் அழியாமை என்ற அதிகாரம் படைத்தார். இதன் பொருள் மனிதன் உழைப்பினால் உயர்பவன். அப்படிப்பட்டவன் மந்திரத்தில் மாங்காய் காக்கும் என்னிடம் வாருங்கள் என்று ஏமாற்றும் எதிரிகள் இந்நாட்டில் உண்டு. அவர்கள் மதக் கொள்கையால் மற்ற தீயச் செயல்களினால் மண்ணின் மைந்தர்களை பொருளாதார மேம்பாடு அடைவதற்குத் தடை செய்வர். அத்துடன் மட்டுமன்று இவர்கள் நல்ல கல்வி கற்று அறிவாளிகளாக அல்லது நல்ல பொறியாளர்களாக மலர்வது கண்டு அஞ்சி பாவம் புன்னியம் தேவர் அசுரர் சொர்க்கம் நரகம் என்று பற்பல பாகவதக் கதைகளைப் படைத்து மனித சிந்தனையை பறித்து விடுவர். இதனை அறிந்து நடந்தால் மனிதா நீ உனது பயணத்தில் வெற்றி பெறலாம் என்றார்.

இத்தகைய அறிதலைத்தான் இடுக்கண் அழியாமை என்று தலைப்பிட்டார் பெரியார். கவலைப்படாமல் முயன்று முன்னேறு என்றார். முயற்சி திருவினையாக்கும் என்றார். முன்னேறுவதற்குத் தடை மனிதன் தந்த மூட நம்பிக்கைகள் என்றார். அதாவது உனது முயற்சியை முடக்கிப் போடும் இராகு காலம் எம கண்டங்களை உனது மனதில் இருந்து வெளியே வீசி எறிகின்ற தன்னம்பிக்கையைப் பெறு என்றார். இவைதான் உனக்கும் உனது முயற்சிக்கும் பகை அல்லது இடுக்கண் என்பதை அறிந்து கொள் என்றார். அப்படி பஞ்சாங்கத்தினைக் காட்டி உனது மனதில் பயத்தை விதைக்கின்ற வாஸ்த்து காட்டும் பொய்யர்களின் நய வஞ்சக வார்த்தைகளை நம்பாதே என்றார். அதற்காக அவர்களை தடி கொண்டு தாக்கிட வேண்டாம். அவர்களது கபட வேடத்தினையும் அவர்களது கபட வார்த்தைகளையும் அறிந்தால் உனது மனதில் அவர்களை இகழ்ந்து ஒதுக்கும் தன்மை தானே வந்து விடும் என்றார். இதனையே இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.

காரணம் மனிதா உனது முயற்சிக்கு உலை வைப்பது உனது முயற்சியை முடக்கிப் போடுவது மேலே கூறப்பட்ட ஈனர்களின் கொள்கை விளக்க’ கதைகளினால் வந்த கேடு என்பதை நமது தாத்தா பாட்டன்களின் வரலாறு கூறும் உண்மை. எனவே உனது மன வலிமையும் உனது இடையறா முயற்சியும்தான் உன்னை முன்னேற்றும் என்றார். அதாவது நன்கு உழைத்து சம்பாதித்து முன்னேறு என்பது அவரது போதனை.

நாளும் கோளும் மனித முயற்சிக்குத் தடையன்று. தடையாய் இருப்பது தவறான அறிதல் என்கிறார். இத்தகைய தவறான அறிதலைத்தான் இன்றும் ஆரியன் காட்டிய மதங்கள் தந்து கொண்டு இருக்கின்றன. எந்தக் கடவுளும் மனிதா நீ உழைத்தால் உயரலாம் இல்லையேல் துன்பத்தில் உழல்வாய் என்ற அறிதலைத் தருவதில்லை. மாறாக என்னை வணங்கு நான் உன்னைக் காப்பேன் என்று கூறும் கடவுள் கொள்¬ளினால் நமது நாடு மாற்றான் கையில் எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அடிமைபட்டுக் கிடந்தது என்பதை நாம் அறிவோம். இன்றைய இந்திய நாட்டின் வளர்ச்சி எண்ணற்ற கல்விக் கூடங்களின் வளர்ச்சியால் வந்ததே ஒழிய இராசராசன் கட்டிய கோயில்களால் வந்தது அன்று.

கோயில்கள் மண்ணின் மைந்தர்களை தீண்டத் தகாதவர்கள் என்றுதான் இன்றும் பறையறைகின்றன. கோயில் கருவரைக்குள் கால் வைத்திடக் கூட அருகதையற்றவர்கள் என்ற கொள்கையை இன்றையக் கோயில்கள் காத்து நிற்பதை அறிவோம். ஆனாலும் அந்தக் கொள்கையை கை கட்டி வாய் பொத்தி வாழ்த்தும் மனிதர்களின் அறிதல் மடமையைக் காத்திடும் அறிதல். மனித இனத்திற்கு இடுக்கண் தரும் அறிதல். இத்தகைய இடுக்கண் தரும் அறிதலை அடுத்தூர்வது எவ்வாறு என்பதற்கு – இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃது ஒப்பது இல் (திகு 621) என்றார்.

இத்தகைய தவறான கொள்கைகளை எத்தனைக் காலத்திற்கு ஏற்க முடியும் ? இதனை நம்மால் மாற்றிட முடியுமா ? நம்மால் உழைத்து முன்னேற முடியுமா ? நம்மால் இந்தப் படிப்பு படித்திட முடியுமா ? என்ற எண்ணற்றக் கேள்விகளுக்கு விடையாக வள்ளுவர் கூறிய விடையை இங்கு நினைவு கூறுவோம். அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (திகு 611) என்ற குறளை நினைவோம். முயற்சி நமக்கு பெருமை தரும் என்று மாற்றி அமைத்து பொருள் கொள்வோம். வள்ளுவம் அறிவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here