வள்ளியம் என்னும் செருக்கு

0
715

மனித வளம் காத்திடும் முக்கிய குணங்கள் என்று ஒரு சிலவற்றை மனோ தத்துவ நூலோர் கண்டறிந்துள்ளனர். அவற்றிள் முக்கிய பங்காற்றுவது செருக்கு என்ற ஒன்றாகும். அதாவது ஆங்கலத்தில் ஈகோ என்றும் தமிழில் அகங்காரம் என்றும் கூறுவர். இந்தப் பண்பு கூடாது எ ன்று கூறுவது காவி கட்டி கையை தூக்கி ஆசிர்வதிக்கும் கூட்டம். காரணம் அவர்கள் எதிர்பார்ப்பது இந்த மக்கள் கூட்டம் அறிவும் திறமையும் பெற்று தனது சொந்தக் காலில் நிற்பதை அவர்கள் விரும்புவதில்லை. கலிலியோவின் அறிவும் அறிதலும் இந்த மதவாதிகளின் மடமையை மக்களுக்கு தோலுறித்துக் காட்டிவிடும் என்று பயந்தது வாட்டிகன் அரண்மனை. அந்த அறிஞனை அன்று தண்டித்தது. மக்களை கடவுள் என்ற ஒரு வார்த்தையினால் கட்டிப் போட்டு விட வேண்டும் என்ற வெறிச்செயலின் வெளிப்பாடுகள்தாம் அந்த மதத் தலைவர்களின் புன் சிரிப்பும் இதமான வார்த்தைகளும் சடங்குகளும். இன்று தேவர்கள் அசுரர்கள் என்று கதை சொல்லும் காவி வேட்டிகளின் மனமும் இத்தகைய கொடுங்குணம் கொண்டது என்பதை மனு நீதி படித்தோர் அறிவர். மேலும் கடந்த காலத்தில் இத்தாலியில் கோலோச்சும் வேட்டிகனில் முடி சூடா மன்னர்களாக உலாவந்த போப்பாண்டவர்களின் செயல்பாடுகளும் நாட்டில் அவர்களது கொள்கையினால் இங்கிலாந்தின் அரச வம்சம் அடைந்த இன்னல்களும் உலகம் அறியும்.

அவர்களின் கடவுள் கொள்கை மண்ணாலும் கொள்கையாக மாறியபோது கிருத்துவம் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்ட் என்றும் பிரிந்த வரலாற்றினை அறிவோம். இது போன்றே நெப்போலியனின் முடி சூட்டு விழாவில், மணி மகுடத்தினை போப் எடுத்து சூட்டிட அனுமதிக்காத காரணத்தினால், மதம் அந்த மா வீரனை வலிமை இழந்தவனாக்கியது. ஆனால் வள்ளுவரது வாக்கு மதம் கடந்து மனிதனை நேசிப்பது. மனிதன் திறமைசாலிகளாக அறிவும் உழைப்பும் உற்பத்தியும் உறவும் நெஞ்சில் உரமும் கொண்டவன் என்பதை அங்கீகரிப்பது. இந்த அங்கீகாரமே மனிதனை உயர்த்திப் பிடிப்பது. இந்த உயர்ந்த பயன்பாட்டினை ஒவ்வொரு மனிதனும் அறிந்திட வேண்டும் என்பார் அறிஞர். இதனையே தன்னையிறிதல் என்பார். இதனையே தன்னையறிந்தால் தலைவனாகலாம் என்பார் திரு மூல நாயனார். இந்த செல்ப் எஸ்டீம் எந்த ஒரு நொடியிலும் குறைந்து விடாமல் மனதில் கொண்டிட வேண்டும் என்கிறார் பெரியார். அதற்கு அவனது திறமைகள் செயல்பாடாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்திட வேண்டும். அவனது திறமையில்தான் அவன் வெளி உலகிற்கு அறிமுகமாகின்றான். மக்களால் போற்றப்படுகின்றான். அவனது அந்தக் குணத்தினை தனித்தன்மையாக உணர்ந்தவன் செருக்கு கொள்கிறான். அப்படிப்பட்ட செருகு தான் ஈகோ அல்லது அகங்காரமாக மலர்வதில் தவறு இல்லை என்பார்.

அகம்காரம் என்ற சமஸ்கிரத சொல்லின் பொருள் அகம் இதி கரோமி என்பதாகும். தமிழில் என்னால் இதனை செய்திட முடியும் என்ற அறிதல் ஆகும். இந்த அறிதல் மனிதத் தேவையாகும் என்பார் பெரியார். திறமையற்றவர்கள்தாம் நான் தாஸானு தாஸன் என்றும் மற்றவர்களின் அடிமைகள் என்றும் வெளிப்படையாகக் கூறிக் குனிந்து நிற்பர். அத்தகைய வீணர்களினால் பயன்பாடு கொண்ட நல்ல செயல்கள் வெளிப்படுவதில்லை. எனவே அவர்களிடம் வள்ளுவர் காட்டும் செருக்கு மலர்வதற்கு வாய்ப்பில்லை. காரணம் அவர்களிடம் உழைத்து முன்னேறுவதும் மற்றவர்களை முன்னேற்றுவதுமான கொள்கை இருப்பதில்லை. சுருங்கச் சொன்னால் அகங்காரம் என்ற குணம் கொண்டோரது உள்ளத்தில் திறமையும் செயல் திறனும் ஓயாத உழைப்பும் குடிக் கொண்டிருப்பதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார். உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு (திகு 598) என்கிறார். இதன் பொருள் நான் இந்த உலகத்திற்கும் உதவிடும் அறிவும் ஆற்றலும் கொண்ட மனிதன் என்ற அறிதலைப் பெறாதவர்கிடம் அல்லது ஊக்கமும் செயல் திறனும் கொண்ட உள்ளம் இல்லாதோரிடம் நான் தலை சிறந்த மனிதன் என்ற பெருமிதம் இருக்காது என்று காட்டுகிறார். உழைத்திட வேண்டும் என்ற மனதில்தான் ஊக்கம் இருக்கும். அத்தகைய ஊக்கம் இல்லாத உள்ளம் கொண்ட மனிதன் ஒன்றுக்கும் உதவாத மரத்திற்கு சமமாவான் என்று தூற்றுகிறார் புலவர்.

இத்தகைய வீரமிக்க ஊக்கத்தினை முயற்சியை உரம் என்கிறார் பெரியார். உரம் என்றால் சற்றே விளக்கமாக கூறுங்கள் என்பார்க்கு உரம் ஒருவற்கு உள்ளத்தின் ஊக்கம் (திகு 600) என்பார். ஊக்கம் என்றால் உயர்வு தரும் செயல் என்றும் உயர்ந்த வினையாற்றும் அறிவும் அறிதலும் என்று நிகண்டுகள் கூறும். இத்தகைய ஊக்கம் இல்லாதார் உள்ளத்தில் தன்னம்பிக்கை மலர்வதற்கு வாய்ப்பில்லை அல்லது நல்ல முயற்சி இருப்பதற்கு வாய்ப்பில்லை, உலகத்தில் தாம் ஒரு தலை சிறந்த அறிஞன் என்றும் பொறியாளன் என்றும் மருத்துவன் என்றும் விஞ்ஞானி என்றும் சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு அவர்கள் கல்வியும் செயல்பாடும் பெறுகின்ற வாய்ப்பினை இழந்து நிற்பர். இதனையே போர்க்களத்தில் உடம்பெல்லாம் அம்புகள் தைத்து நின்று குருதி கொட்டுகின்ற நிலைமையிலும் யானையானது பின் வாங்கிடாமல் முன்னேறிச்சென்று எதிரிகளை வளைத்துப் பிடித்து மிதித்து போர் செய்து கொண்டே இருக்கும். அது சுகமான வாழ்விற்கு ஏங்கி கோழையாக நான் தாஸானுதாஸன் உனது பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் என்று கூறி தரையில் விழுந்து வணங்காது. இதனையே சிதைவிடத்து ஒல்காது உரவோர் புதையம்பின் பட்டு பாடு ஊன்றும் களிறு (திகு 597) என்றார். உழைப்போம் உயர்வோம். வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here