அரசனது அறமும் அரமும்

0
609

வள்ளவர் காலத்து மண்ணில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறநெறி காத்து வாழ்தனர் என்று கூறுவதற்கில்லை. புலவர்கள் என்றும் தாம் காணும் சமுதாய சீர் கேடுகளைக் கண்டு சும்மா இரு சொல்லறு என்று அமைதியாக இருப்போர் அல்ல. அவர்களது கண்ணும் மனமும் காணும் அவலங்கள்தாம் அவர்களை புலவர்களாக்குகின்றன. அந்த வகையில் புலவன் பிறக்கின்றான் என்போர் உண்டு. அல்லது புலவர்களை உலகம் உருவாக்கிவிடுகிறது என்போர் உண்டு. அல்லது ஒரு சிற்பி கூரிய உளி கொண்டு தன்னை செதுக்கிக் கொள்கிறான். அவர் ஒரு கலை நயமிக்க சிலையாகிறான் என்போரும் உண்டு. அந்த வகையில் வள்ளுவர் கண்ட இருவித பண்புகள்தாம் அறமும் மறமும். அறம் என்பது மனித குலம் போற்றும் உன்னத குணமும் சொல்லும் செயலும் ஆகும். தர்மம் தானம் அமைதி சீர்மை பெருமை நன்மை என்ற மனிதன் பெரும் இடையறா இன்பமும் நன்மை தரும் சொல்லும் செயலும் அறச் சொல்லாகவும் அறச் செயலாகவும் போற்றப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக மனித குலத்திற்கு அல்லது பிற உயிர்களுக்கு மனதாலும் சொல்லாலும் செயலாலும் துன்பம் அல்லது இன்னல் தரும் குணங்கள் மறச்செயலாக தூற்றப்படுகிறது.

எனவே இன்பம் துன்பம் என்ற நிலைப்பாட்டில் அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல (திகு 39) என்பது பெருமகனின் வாக்கு. எனவேதான் அரசாங்கம் மறச்செயல்களை செய்து மகிழ்தல் என்பது அரசு கட்டில் அமர்ந்தோரின் மானம் துறந்த செயல் என்பார் பெரியார். அவரது வாக்கு அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு (திகு 384) என்பதாகும். இந்தக் குறள் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியக் குறள் பா ஆகும். ஆனால் அறன் இழுக்காது என்றால் அந்த அரசு கட்டில் இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்து வந்த அறச் செயல்களை வழுவின்றி காத்தல் அடுத்து வரும் ஆட்சியாளருக்கு கடமை என்று அறிவுறுத்துவது. இங்கே மறன் என்பதற்கு வீரம் என்று பொருள். அதாவது அரசனின் வீரம் என்பது தனது தவறுகளைச் சுட்டிக்காட்டுவோர் மீது தமது படை பலத்தை அல்லது அரசின் அதிகாரங்களை ஏவி விடுவதன்று. புப்பொருள் வெண்பா மாலை படித்தோர் இதனை அறிவர்.

பதவி’காகவும் பணத்திற்காகவும் கை கட்டி வாய் பொத்தி குணிந்து கும்பிட்டு நிற்கும் இன்றைய வெள்ளை வேட்டியர் அறிந்து கொண்டு நிமிர்ந்து நின்று மக்கள் நலம் காப்போராக இருந்திட வேண்டும் என்கிறது வள்ளுவரின் வாக்கு. மனிதனை மனிதனாக காத்து அவனை மேதையாக்குவது வள்ளுவரது வாக்கு. வள்ளுவர் மேலும் கூறுவார் அரசு கட்டில் ஏறியோரின் மிரட்டல் பேச்சுகளும், தனது தவறுகளைச் சுட்டுவோரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் போட்டு விடுவேன் என்று மிரட்டலும் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே தோண்டிக் கொள்ளும் சவக் குழி என்பார். இதனையே கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம் (திகு 567) என்பார்.

கை இகந்த தண்டம் என்றால் செய்யப்படுகின்ற உயர்ந்த பட்ட அளவையும் தாண்டிச் செய்வது. கடுமையான செயல்களை செய்திடும் கொடுங்குணமும் செயலும் கை இகந்த தண்டம் என்ற சொற்கள் தருகிறது. இது அரசனின் அடு முறன் தேய்கும் அரம் என்பார். அரம் என்றால் மெல்ல அறுத்து தேய்க்கின்ற இரும்புப் பல். அவர்களை மெல்ல வேரருக்கும் வலிமை மிகுந்த கருவி. உலக வரலறு அத்தகைய மறச் செயலாளர் பலர் மறைந்தொழிந்ததை காட்டும் குறள் வரிகளை அறிவோம். அறிவு பெறுவோம். எதற்கும் எப்பொழுதும் யார் காலிலும் விழுந்திடாமல் நிமிர்ந்து நிற்போரை போற்றுவோம். இவர்கள் அறிவாளிகள் இவர்கள் எம்மவர் என்று பாமர மக்கள் பெருமையாக பேசும் அறிவினைப் பெற்றோர் ஆட்சியாளர்களாகட்டும்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here