சொல்லுவது யார்க்கும் எளிதே !

0
805

உபதேசம் என்பது எப்படி வாழ வேண்டும் என்ன பேச வேண்டும் எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நலம் தரும் செய்திகளாகும். அது போன்றே என்ன பேச கூடாது யாரிடம் பேச கூடாது போன்ற தள்ள வேண்டிய வார்த்தைகளையும் செயல்பாடுகளையும் முன்னதாகவே அறிந்து கொள்வதும் நலம் தரும் உபதேசமாக உள்ளது. நாம் ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு செயலையோ நினைத்த மாத்திரத்தில் செயலாக்கம் செய்து விடுகிறோம். ஆனால் அது தருகின்ற பின்விளைவுகள் நம்மை வருத்தமடையச் செய்யும்போது அடடா யோசிக்காமல் செய்து விட்டேனே என்று மௌனமாவோம். அல்லது மன்னித்து விடுங்கள் நான் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டேன் அதனால் வந்த வினை என்று கூறி நமது மனது மேலும் காயப்படாமல் காத்துக் கொள்வோம். இத்தகைய நுட்பமான அறிதல் இயல்பாய் வாழும் மனிதர்களுக்கு அவசியமாகிறது.

கயமையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் இத்தகைய மதி நுட்பம் பெற்றிருக்க மாட்டார்கள். ஆகையால்தான் அவர்களைப் பற்றி பேச முனைந்தபோது மக்களே போல்வர் கயவர் என்று அடையாளப்படுத்தினார் பெரியார். தப்பித் தவறி இத்தகைய அறிவு தலை காட்டினாலும் மன்னியுங்கள், நன்றி, வாழ்க என்பது போன்ற நலம் தரும் வார்த்தைகளை நாவிலேற்றி உச்சரிக்கவும் அவர்களது மனது இடம் தராது. இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்தான் நாமும் வாழ்ந்து வருகிறோம். நமது வாழ்வும் தவிர்க்க இயலாத ஒன்று. வாழ்வது அவசியம். ஆனால் இப்படிப்பட்ட தீய எண்ணமும் செயலும் நமது உயிர்ச் சக்தியை தீய்த்திடாமல் காத்திட இனிய முகமும் இனியச் சொற்களும் எளிய முயற்சியும் தொடர்ந்து நம்மிடம் இடம் பெற்றிட வேண்டும்.

எனவே ஒரு செயல் முடிக்கும் முன்னதாக செயல் திட்டத்தினை எழுத்தில் வடித்திடல் அவசியமாகிறது. அப்போதுதான் அதில் உள்ள நிறையும் குறையும் முன்னதாக அறிந்து களைந்திட முடியும். அல்லது செம்மைப் படுத்திட முடியும். இருப்பினும் இதனை முன்னதாக வார்த்தையால் சொல்லும்போது அது வெறும் வார்த்தையளவிலேயே உயிரற்று மடியும். அல்லது எதிர்வினையாற்றும் எதிரிகளை உருவாக்கிவிடும். எனவே அதனை வார்த்தைப் படுத்திடாமல் செயல்படுத்து என்கிறார் பெரியார்.

காரணம் எல்லா மனிதர்களும் ஏதேதோ சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவரது செயலை சரி என்று ஒருவர் சொல்லும்போதே வேறு ஒருவர் அது தவறு என்று எதிர் கருத்தினை எடுத்தாள்கிறார். இதனை செவிமடுத்து சரியா தவறா என்று கேட்பவன் தன் மீது கொண்டுள்ள அறிதலையும் ஆற்றலையும் இழந்தவனாகிறான். காரணம் தூற்றுபவர்கள் செயல் படுத்திட இயலாதவர்கள், இதனையே சொல்லுதல் யார்க்கும் எளிய அரிவாம் சொல்லிய வண்ணம் செயல் (திகு 664) என்றார். வள்ளுவர் இந்த’ குறளை யாருக்காக செய்தார் என்பதை இப்போது அறிகிறோம் அல்லவா ? இ’குறள் எதையும் தவறு என்று வாதம் செய்யும் சோம்பேறிகளைப் பார்த்து சாடிய வார்த்தை என்பதை அறிவோம்.

ஏன் இப்படி இவர்கள் வாய்ச் சொல்லில் வீரராக வீணராக பொழுதை போக்குகிறார் என்று யோசிக்கிறார் பெரியார். அவர் கண்டது நமக்கு ஒரு படிப்பினையை நல்குகிறது. அது வினைத் திட்பம் என்பதாகும். வினைத்திட்பம் என்பதுதான் தன் மனத்தில் வடித்த நலம் தரும் காரியங்களுக்கு உருவம் சமைக்கும் திட்பம். திட்பம் என்றால் உறுதித் தன்மை. உறுதி என்பதோ எந்த செயலை எப்படிச் செய்தால் அது முடிந்து பின் தொடர்ந்து பயன் நல்கும் என்ற அறிதல் ஆகும். இந்த அறிதல் கொண்ட மனம்தான் உறுதியான மனம். மற்ற அறியாத அறிதலைக் கொண்ட மனம் கோழைகளின் கை வாள்.

எனவேதான் அறிவாளி என்றும் எவரிடத்தும் தலை வணங்கி குணிந்து கும்பிடு போடுவதில்லை. அப்படிப்பட்டவர்களின் வார்த்தையும் சொல்லும் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்கரடீசு, பித்தாகோரஸ் போன்றோர்களின் வார்த்தையாக வழிகாட்டியாக களங்கரை விளக்காக இன்றும் உதவி செய்கிறது. பயன் என்பது மற்றவர் செய்த உதவியாகும். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார் வள்ளுவர். எத்தனை நுட்பமான சொல்லாட்சி பாருங்கள். இப்படிப்பட்ட உறுதிப்பாட்டை குறிக்கும் குறள் இதோ. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற (திகு 661) என்பதே அது.

எனவே சொல்லுதல் யார்க்கும் எளிய என்பதால் மற்றவர்களின் வார்த்தை நமது முயற்சியை அல்லது செயல்பாடுகளை முடக்குவதாக உள்ளதா அல்லது இனிதே முடிப்பதாக உள்ளதா என்று ஆய்ந்து செயல் படுக என்பது வள்ளுவம். குறள் அறிவோம்.

ஆக்கியோன் – பாவலர் சீனி.பழநி பிஏ,
இணைச் செயலர், அண்ணா நகர் தமிழ்ப் பேரவை.
தொடர்புக்கு கை பேசி 9940693986.

-அடுத்து வருவது (வள்ளுவர் வாக்கும் பழமொழி அன்றோ!) காணத்தவராதீர்கள்