தெய்வம் தான் முந்துறும்

0
923

வள்ளுவர் காட்டும் தெய்வமும் தெய்வக் கருத்துக்களும் மனித சிந்தனையை தூண்டுவதாக அமைந்துள்ளது. ஆனால் தெய்வம்தான் என்ன அது எப்படி இருந்திருக்கும் என்று நான் எனது தந்தையிடம் கேட்டதில்லை. அது போன்றே எனது தந்தையும் அவரது தந்தை தாத்தாவிடம் கேட்டிருக்க மாட்டார். ஆனால் எனது தலைமுறையினர் ஆண்டாண்டு காலமாக ஆரியர்கள் படைத்த தெய்வக் கொள்கைக்கு அடிமைபட்டு விட்டன.

புத்தர் ஆணித்தரமாய் கடவுள் இல்லை என்று கூறி மனித அன்பையும் அரவணைப்பையும் முன்னிறுத்தினார். வள்ளுவர் இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பாகவே ஒரு மதம் கண்டார். இருப்பினும் ஆரியர்களின் கடவுள் கொள்கை அழிந்து விடவில்லை. மாறாக அவை நான்கு பெரிய ஜாதியைப் படைத்து எண்ணற்ற சிறுமைகளைக் காத்து நின்றது.

இப்போது வள்ளுவர் தனது பங்கிற்கு தெய்வம் என்றால் என்ன கேட்போர்க்கு ஒரு புதிய விளக்கம் தந்தார். அது இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் (திகு 5) என்றார். இதன் பொருள் கூறவந்த பெரியோர்கள் இரண்டு என்ற எண்ணிற்கு தனது மனம் போன போக்கில் சஞ்சிதம், பிராரப்தம் என்றும் நல்வினை தீவினை என்றும் சொர்க்கம் நரகம் என்றும் பொருள் தந்தனர். வள்ளுவர் காட்டிய இரு வினை என்பதை பொதுவாக நல்வினை தீவினை என்று எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட இரண்டு வித வினையோ அதன் பயனையோ சாராது இருப்பவன் தெய்வம் என்கிறார். இதனையே சும்மா இரு சொல்லறு என்று சுட்டினர்.

இப்படி சும்மா இருப்பவனால் யாருக்கு என்ன பயன் என்று கேள்வி எழுந்தபோது இந்த உலகம் அத்தகையோரைக் கூர்ந்து நோக்கியது. அப்படி சும்மா இருப்போர் சோம்பேரிகள் என்பதை அடையாளப்படுத்தியது. அப்படிப்பட்ட சோம்பேறிகளைத் தாங்கி நிற்கும் நிலமும் தனது பயனை இழந்து நிற்கும் என்று வள்ளுவம் வசை பாடியது. வசையிலா வண் பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் (திகு 239) என்றது.

எனவே மனிதன் நல்ல முயற்சியும் பயன் தரும் வினையும் ஆற்றிட வேண்டும் என்பதே பொருளாதாரத்தை போற்றும் சிந்தனையாளர்களின் கொள்கை. ஆனால் கடவுளை முன்னிறுத்தும் கயவர்களோ எண்ணற்ற கதைகளைச் சொல்லி மனிதனை பயனற்ற களர் நிலமாக மாற்றி விடுகின்றனர். கடவுள் கைவிட மாட்டார் அவனை நம்பி இரு என்று தவறான போதனைகளைக் கொடுத்து அவனை மதவாதியாக்கி விடுகின்றனர். நல்ல விஞ்ஞானியாக சிறந்த பொறியாளனாக படைப்பாளியாக ஆக வேண்டிய மனிதன், கடவுளின் பெயரால் தனது சுய சிந்தனை இழந்து நிற்கிறான். மாற்றான் கால்களில் விழுந்து எழுவதில் பெருமை கொள்கிறான். அன்பு என்றால் இறைவனிடம் கொள்கின்ற பக்தி ஒன்றே என்ற புதிய சித்தாந்தம் படைத்து மடிகிறான். பரமனைப் பாடும் வாயால் பாமரனைப் பாடேன் என்கிறான்.

இதனைக் கண்ட வள்ளுவர் குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடித்தற்றுத் தான் முந்துறும் (திகு 1026) என்று பதில் இறுத்தார். இதன் பொருள் நான் உழைத்து முன்னேறுவேன். எனது உழைப்பு என்பது யாரையும் சார்ந்தது அன்று. யாருடைய உதவியும் இன்றி நான் பொருள் வளம் பெறுவேன். எனது வளர்ச்சியில் எனது உறவினரும் எனது இனமும் குடியும் நலம் பெற்று வாழும் என்ற குறிக்கோள் கொண்டு வாழ்வர்க்கு கடவுள் தனது வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு முன் வந்து உதவிட ஆயத்தமாகும் என்பதே இதன் பொருள்.

இந்தக் குறள் தெரிவிப்பது கடவுளின் தேவையை அன்று. மனிதனின் தன்னம்பிக்கையின் தேவையைத் தெரிவிப்பதாகும். எனவே மூட நம்பிக்கையை நாம் ஏற்க வேண்டாம் என்கிறார் வள்ளுவர். பொருளாதார மேம்பாடு மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும். உழைப்பே உயர்வு, கடவுளை நம்பி காவி வேஷ்டிக் கட்டிக் கொண்டு விரதம் காத்து நாளையும் கிழமையும் வீனடிப்பதை விட உழைத்து பொருள் ஈட்டுக என்பதே பொருளாதார நிபுணர்களின் அறிவுரை. கடவுள் நம்பிக்கையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது தமிழ் நாடு நல்ல சாலையைக் கூடக் கண்டதில்லை. கல்வியும் கூட கடவுளின் பெயரால் மறுக்கப்பட்ட சமுதாயம் வள்ளுவரின் போதனையில் வளம் கண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here